Blooming Sparkly Red Rose
எமது இணையத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள்... எமது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறாதீர்கள்... செய்திகளைப் பார்வையிட இணையப் பக்கத்தில் வலப்புறம் தரப்பட்டுள்ள செய்தி தளங்களுக்கு செல்லுங்கள்...

வியாழன், 30 நவம்பர், 2017

பலத்த காற்று, அடை மழை மேலும் தொடரும்


நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவும் என
வளிமண்டலத் திணைக்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையின் தென்மேற்கு பக்கமாக 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் மேலும் வலுவடைந்து அரேபிய கடற்பரப்பு ஊடாக நகரும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்துடனான காற்று வீசக்கூடும் எனவும் பல பகுதிகளிலும் கடும் மழைபெய்யக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் கரையோரப்பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு, சப்ரகமூவ, மத்திய, ஊவா ம்றறும் மேல் மாகாணங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்சியாக பெய்து வரும் பலத்த மழைக்காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை,இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, மெனராகலை, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளாது.

மண்சரிவிற்கான அறிகுறிகள் தென்படுமாயின் குறித்த பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் துண்டிப்பு 

பலத்த மழை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல்வேறு பகுதிகளிலும் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது.

கொழும்பு, மாத்தளை, காலி, பதுளை, மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக மின்வினியோகத்தினை வழமைக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக மேல், மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு வரை பெறப்பட்ட தரவுகளுக்கு அமைய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இடர்முகாமைத்துவ நிலையத்துடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இன்று நடத்தப்படவிருந்த தவணை பரீட்சை மற்றுமொரு நாளில் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சில பாடசாலைகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் மதீப்பீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கபடும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

07 படகுகளை காணவில்லை

இதேவேளை, பலத்த காற்றுடன் நேற்றிரவு கடலுக்கு சென்ற 07 படகுகள் காணாமல் போயுள்ளன.

குறித்த படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போயுள்ள படக்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: News 1st

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக